உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா படையினர் வெளியேறியதாக கூறுவதில் உறுதியான தகவல்கள் இல்லையென நேட்டோ தெரிவித்துள்ளது.
படையெடுப்பு குறித்த அச்சத்தை எழுப்பிய பின்னர், உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்தது.
எனினும், இதுதொடர்பாக தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பிவரும் உலக நாடுகளுக்கு மத்தியில், தற்போது நேட்டோவும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நேட்டோ கூட்டணி அமைப்பு நாடுகளின் தலைமை அலுவலகத்தில் கருத்து தெரிவித்த நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,
‘ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் பார்ப்பது என்னவென்றால், அவர்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர், மேலும் துருப்புக்கள் வரவுள்ளன.
அவர்கள் உண்மையிலேயே படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கினால், அதை நாங்கள் வரவேற்போம்.
அவர்கள் எப்போதும் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டிருப்பதால், படைகள், போர் டேங்கிகள் நகர்வுகளைப் பார்க்கிறோம். உண்மையான வெளியேற்றத்தை உறுதிப்படுத்தவில்லை.
2014ஆம் ஆண்டு ரஷ்யா க்ரைமியாவை இணைத்தபோது இருந்ததை விட உக்ரைன் இப்போது சிறந்த பயிற்சி மற்றும் ஆயுத வலிமை கொண்டுள்ளது.
ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்யா முடிவெடுப்பதில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டாலும், படைகளை இணைத்து ஒரு சுதந்திர நாட்டை அச்சுறுத்த முடியும் என்று காட்ட நினைக்கிறார்கள். அது மிகவும் தீவிரமானது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். இதைமீறினால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்” என கூறினார்.