பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவின் மலைப் பிரதேசத்தில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்தில் மழை பெய்ததை அடுத்து, ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோபோலிஸ் நகரம் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 400பேர் வீடற்றவர்கள் என்று ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ கூறினார்.
அத்துடன், நாள் முழுவதும் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து 21பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பெட்ரோபோலிஸ் நகரில் 180க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில தீயணைப்புத் துறை கூறியது. செவ்வாய்கிழமை 25.8 செ.மீ. மழை வீழ்ச்சி பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில், கார்கள் மற்றும் வீடுகள் நிலச்சரிவுகளால் இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டியது.
புதையுண்ட பகுதியை தோண்டுவதற்கு மாநில அரசாங்கத்தின் கனரக இயந்திரங்கள் அனைத்தையும் திரட்டி வருவதாக ஆளுனர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு பெய்த கனமழையால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள பகுதியில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்ற கவலை உள்ளது.