மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிக்கலோஸ் பூரான் 61 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், தீபக் சஹார் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 40 ஓட்டங்களையும் இசான் கிசான் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும் செல்டோன் கொட்ரேல் மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் தெரிவுசெய்யப்பட்டார். அவர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.