புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் இன்று (6) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஹிஷாம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அல்-அக்ஸா மசூதி மாத்திரமன்றி, பழைய ஜெருசலேம் நகரிலுள்ள மேற்கு சுவர் ((Western Wall)) மற்றும் திருக்கல்லறை தேவாலயம் (Church of the Holy Sepulchre) உட்பட அனைத்து புனிதத் தலங்களும் இன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில்இ குடியிருப்பாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களைத் தவிர ஏனையோர் பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தடையை அல்-அக்ஸாவின் சிரேஷ்ட இமாம் ஷேக் இக்ரிமா சப்ரி வன்மையாகக் கண்டித்துள்ளார்.’ஆக்கிரமிப்பு அதிகாரிகள் எத்தகைய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி மசூதியை மூடுகின்றனர், இது முற்றிலும் நியாயமற்ற செயல்’ என அவர் தெரிவித்துள்ளார்.
5 இலட்சம் பேர் வரை தொழுகை நடத்தக்கூடிய அல்-அக்ஸா வளாகத்தில், ரமழான் ஆரம்பத்தில் 10,000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளமை இஸ்லாம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது















