நாட்டின் ஒமிக்ரோன் நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவோ அல்லது தளர்த்தவோ முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், தற்போதைய கொரோனா நிலைமை, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு வழிவகுக்கவில்லையென குறிப்பிட்டார்.
பல மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும் கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், குறித்த நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கொரோனா நிலைமையைப் பொறுத்தவரையில் அது மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் இருப்பினும் அதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்று அர்த்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, அதை மறுபரிசீலனை செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க சிறிது காலம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.