கிழக்கு லடாக் எல்லை பகுதியில் தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை மாற்றி அமைக்க இந்தியா அனுமதிக்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கு லடாக் எல்லையில் தற்போதைய நிலையே தொடரும். அங்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த இந்தியா அனுமதிக்காது. அதில் நாங்கள் முழு உறுதியாக இருக்கிறோம். எல்லை கோட்டை மாற்றியமைக்கும் முயற்சியையும் இந்தியா ஏற்காது.
இது எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருந்தாலும், அதற்கு எவ்வளவு நாட்கள் எடுத்துகொள்ளப்பட்டாலும், எவ்வளவு கடினமான பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்தத் தெளிவுதான் தேவை என நான் கருதுகிறேன்.
இரு தரப்பிலிருந்தும் படைகளை பின்வாங்குவது குறித்து இருநாட்டு இராணுவ வீரர்கள் தரப்பிலும், பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன் விளைவாக பல முக்கிய சிக்கலான விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கலான விடயங்கள் இருக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.