இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானால்,இந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் முன்வைத்து நாடு பூராகவும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பற்றி தமிழ் சமூகத்திற்கு எவரும் எதுவும் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக கஸ்டங்களை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள்.சிங்கள இளைஞர்களும் 1988,89ஆம்ஆண்டுகளில் இந்த சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.நான் சட்டத்தரணியாக தொழில்செய்த காலத்தில் அவர்கள் சார்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று இருந்தாலே ஒருவர் தனக்கு எதிரான சாட்சியமாக அதனை கொடுத்துவிடமுடியும்.இந்த சட்டத்தில் உள்ள பிரதான ஆட்சேபனைக்குரிய விடயம் அதுதான்.பொலிஸார் எந்தவித விசாரணையும் செய்யவேண்டிய அவசியம் கிடையாது.ஒருவரை சித்திரவதை செய்து குற்ற வாக்குமூலத்தினைப்பெற்றுக்கொண்டால் அந்த குற்றத்தினை அவர்கள் தீர்த்துவிட்டதாக கருதப்படும்,அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு பல விடயங்கள் காணப்படுகின்றன.காலவரையறையின்றி ஒருவரை தடுத்துவைத்திருக்கமுடியும். இந்த ஏற்பாட்டை தவிர 18மாதங்கள் தடுத்துவைப்பதை 12மாதங்களாக குறைக்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.இந்த 18மாதங்கள் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒருவரை தடுத்துவைத்திருக்கும் காலமாகும்.ஆனால் அவரை நீதிமன்றில் நிறுத்திவிட்டால் நீதிவானுக்கு இருக்கும் ஒரேயொரு அதிகாரம் அவரை விளக்கமறியலில் வைப்பதுதான்.
வழக்கு முடியும் வரையில் அவரை விளக்கறியலில் வைக்கவேண்டும் என்று பிரிவு 07சொல்கின்றது.ஆகையினால் 18மாதங்களை 12மாதங்களாக குறைத்துவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை. 12மாதங்களுக்குள்ளே அவரை நீதிவானுக்கு முன்பாக நிறுத்தினால் காலவரையறையின்றி தடுத்துவைக்கமுடியும்.
தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரிக்கை வைக்கலாம் என்ற புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளார்கள்.ஆனால் மேலும் முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கமுடியும் என்று கூறப்பட்டுள்ளதற்கு கீழாக மேலும் முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகு அதற்கு கீழ் உள்ள மேல் நீதிமன்றம் மீண்டும் அவரை விளக்கமறியலில் வைக்கமுடியும் என்றுதான் அதில் சொல்லப்பட்டுள்ளது.
உலகத்தில் எங்கும் இவ்வாறான சட்டம் இல்லை.இவ்வாறான சட்ட திருத்தங்களையே கொண்டுவருகின்றார்கள்.அதனால்தான் இந்த திருத்தம் கண்துடைப்புக்கூட கிடையாது என நாங்கள் கூறியுள்ளோம்.
பலர் எங்களிடம் கடந்த ஆட்சிக்காலத்தில் இதனை நீக்ககூடிய காலம் இருந்தது ஏன் நீங்கள் அதனை செய்யவில்லையென கேட்கின்றனர்.அவ்வாறு கேட்கின்றவர்களுக்கு ஞாபகமறதி அதிகம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.பயங்கரவாத தடுப்பு சட்டம் என்ற அடிப்படையில் அது கொண்டுவரப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக ஒழித்து சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது.அது கொண்டுவரப்பட்டபோதும் அதனை நாங்கள் எதிர்த்தோம்.அதிலும் மோசமான பல விடயங்கள் இருந்தன.அதனை நாங்கள் எதிர்த்த காரணத்தினால் ஒரு நாடாளுமன்ர மேற்பார்வை குழுவில் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று,நாங்கள் எதிர்த்த அனைத்து விடயங்களும் மாற்றியமைக்கப்பட்டன.அப்படியிருந்தும் வேறுசில புதுவிடயங்கள் அதிலிருந்த காரணத்தினால் பலர் எதிர்த்தார்கள்,அவையும் மாற்றப்படவேண்டும் என்று நாங்கள் சொல்லியிருந்தோம்.
இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்.அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள்,கலந்துரையாடல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட விரோதமாக பிரதமரை நீக்கி மகிந்த ராஜபக்ஸவினை நியமித்த அரசியலமைப்புக்கு எதிரான புரட்சி காரணமாக இந்த நாடு ஸ்திரமற்ற தன்மைக்கு சென்றுவிட்டது.அரசாங்கத்திற்கு அங்கு பெரும்பான்மையும் இருக்கவில்லை.
அதனை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கினால் எங்களால் தாக்குதலை தடுக்கமுடியாது என பாதுகாப்பு தரப்பினர் கோசத்தினை எழுப்பி,கடுமையான சட்டமும் கடுமையான ஆட்சியாளர்களும் வேண்டும் என்ற கோசத்தினை எழுப்பித்தான் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாலும் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியானதும் நடைபெற்றது.இந்த சரித்திரம் தெரியாதவர்கள் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்;டது.புதிய சட்டமூலத்தில் குறைகள் இருக்கலாம்.பலவிடயங்கள் இருந்தன.நாங்கள் முயற்சிசெய்தோம்.முயற்சிசெய்வில்லையென யாரும் கூறமுடியாது.
தற்போதுள்ள அரசும் இதற்கு முன்பிருந்த அரசுகளும் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்று சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்துள்ளனர்.அந்த வாக்குறுதி 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது.அது செய்யப்பவில்லையென்ற காரணத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் ஜிபிஎஸ் சலுகையினை வழங்குவதா இல்லையான என ஆராய்ந்துவருகின்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கடுமையான அழுத்ததினை கொடுக்கின்றோம்.
இது தமிழ் மக்கள் மட்டும் சொல்லும் விடயமல்ல.இது நாடு முழுவதும் உள்ள ஜனநாயகத்தினை மதிக்கின்ற,மக்கள் அனைவரும் சேர்ந்து எழுப்புகின்ற குரலாகயிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதனை நாடளாவிய ரீதியில் இதனைச்செய்கின்றோம்.
ஒரு குறித்த இளைஞர் அணியை நோக்கி ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமானதாக கொண்டுவரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இன்று 42வருடங்களையும் கடந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.இது மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டம்,உலக ஒழுங்குகளுக்கு: எதிரான சட்டம் ,உலக மனித உரிமைகள் விழுமியங்களுக்கு மாறான சட்டம்.
இந்த நாட்டில் மனித உரிமைகள் பேணப்படவேண்டுமானாலஇந்த நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமிருக்கவேண்டுமானால் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்,இதற்கு அனைத்து மக்களும் குரல்கொடுக்கவேண்டும்.
இன்று சிங்கள மக்கள் பெருமளவில் இந்த சட்டத்தினை நீக்குவதற்கு ஆதரவு வழங்கிவருகின்றனர்.இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் தவறவிடாமல் இனைத்து இன மக்களும் இணைந்து எடுக்கும்முயற்சியாக இதனை நாங்கள் முன்கொண்டுசென்று மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும்.
வெறுமனே சர்வதேசத்தின் அழுத்தங்களினால் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே ஏழுப்பப்படுகின்ற குரல் இந்த நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் இதனை முன்னெடுக்கவேண்டும்.அதற்கு அனைத்து இன மக்களின் தலைவர்களின் ஆதரவினை வேண்டுகின்றோம்.” என தெரிவித்தார்.