தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாகவும் ஆனால் இருவருக்குமிடையில் அல்லது ஜனாதிபதியுடனோ உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட விக்கிரமசிங்க எந்த கலந்துரையாடலையும் நடத்தவில்லை என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று பொருளாதார உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரி வரும் ரணில் விக்ரமசிங்க, னைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரியுள்ளார்.
குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தேசியக் கொள்கையை வகுக்க அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.