பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊதிடம் (Faisal bin Farhan Al Saud) தெரிவித்துள்ளார் .
சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் .
மேலும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார் .
இதேவேளை தமது நாடும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் சவுதி வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்ததோடு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இச்சந்திப்பில் சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நசீர் அல் பர்ஹாத், சவுதி வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல் தாவூத், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது .