மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராமங்களில் இயங்குகின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று (திங்கட்கிழமை ) மன்னார் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கலந்துரையாடல் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக தற்போது மாவட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் வனவளத் திணைக்களம், தொல்பொருள் தினைக்களங்கள் பொதுமக்களின் காணிகளை எல்லையிடுவது, கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின்சாரத்தினால் கடல் வளத்திற்கும் பொது மக்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் போன்றவை குறித்து ஆராயப்பட்டது.
இவற்றுக்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புகளும் எவ்வாறு இணைந்து செயற்படுவது என கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.