நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று(புதன்கிழமை) ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம்.
கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள்.
எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.
அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.
உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.