ரஷ்யாவுடனான சீனாவின் உறவு மற்றும் உக்ரைனில் நிலவிவரும் போரில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வளர்ந்து வரும் அமெரிக்க கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.
இருநாட்டு தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 13:00 மணிக்கு தொலைபேசியில் உரையாடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு இவரும் பேசவுள்ளனர்.
ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ‘ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதற்கு பைடன் அழைப்பை ஏற்படுத்துவார் எனவும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு சீனா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
சீனா குறிப்பாக ஜனாதிபதி புட்டினுடன் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கும், அது ஆதரிப்பதாகக் கூறும் சர்வதேச விதிகள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் ஒரு பொறுப்பைக் கொண்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
மேற்கத்திய நாடுகளும் நட்பு நாடுகளும் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்துள்ள நிலையில், கெய்வ் மற்றும் மாஸ்கோவுடன் நெருங்கிய உறவைக் கொண்ட சீனா, இதுதொடர்பாக எவ்வித முடிவிடினையம் எடுக்கவில்லை.
ஒரு இராஜதந்திர கயிற்றில் நடந்துக்கொண்டிருக்கும் சீனா, உக்ரைனின் இறையாண்மையை வலியுறுத்தும் அதே நேரத்தில் ரஷ்யாவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைனில் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதில் அமெரிக்கா இரகசியமாக வேலை செய்து வருகிறது என்று ரஷ்ய கூற்றுக்கள் மற்றும் எதிரொலிக்கப்பட வேண்டிய நியாயமான பாதுகாப்பு கவலைகள் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் சீனா வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளன.