இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு இந்நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹுசைன் அல் ஹார்தியின் பதவிக்காலத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவரைப் பாராட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக சவூதி அரேபிய உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஹார்தி தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய பல சிறப்பு வரிச் சலுகைகள் உள்ளன. மருந்து, தொழிநுட்பம் மற்றும் ஆடைத் தொழில் துறைகளில் நேரடி முதலீட்டிற்கான பரந்த வாய்ப்புகள் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்துடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளில் முதலீடு செய்யுமாறு சவூதி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் இந்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கு வழங்கிய உதவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.