மிரிஹான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மிரிஹான சம்பவம் தொடர்பான நிலைமையை ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்புக்குழுவொன்றும் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு நுகேகொடை மிரிஹான பெங்கிரிவத்தையிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், இதனை கட்டுப்படுத்த பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டது. பொலிஸாராரல் கண்ணீர்புகை வீசப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய, நுகேகொடை பொலிஸ் பிரிவு , களனிய பொலிஸ் பிரிவு, கல்கிசை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.
குறித்த ஊரடங்கு காலை 12.48 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு இன்று காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. குறித்த சம்பவத்தில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.