பொறுப்பு கூறுவதற்கு எவரும் அற்ற ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அறிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள போரட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் பாரதூரமான நெருக்கடி நிலைமையே நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஒவ்வொரு கணமும் சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு தருணத்தில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஏனையோர் இந்த அடக்குமுறைக்கு எதிராக உணர்வுபூர்வமாகவும் அமைப்பு ரீதியாகவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு அமைப்புக்களுக்கும் இயக்கங்களுக்கும் பொது மக்களுக்கும் உரிமை உண்டு.
ஆனால், எந்தப் பொறுப்பும், அமைப்பாளரும் இல்லாத, ஒழுங்கமைக்கப்படாத போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இதுபோன்ற பொறுப்பு கூறுவார் அற்ற பொதுப் போராட்டங்களுக்குப் பின்னால் கூட ஆபத்து இருக்கலாம்.
அதேவேளை சுயமாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் இலாபம் தேடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் செயற்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.