ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடும் கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.
மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பதிலாக நாட்டின் தற்போதைய பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அபிவிருத்தி அரசியலால் எவ்வித பயனும் இல்லை கொள்கை அரசியலை செயற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை #GoHomeGota என போராட்டம் நடத்தும் மக்கள் ராஜபக்ஷர்களையும் அரசாங்கத்தையும் மட்டும் வெளியேறுமாறு கோரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக நாடாளுமன்றத்தை பிரிதிநிதித்துவம் செய்யும் அனைவரும் தமது கடமைகளை செய்ய தவறிவிட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆகவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோஷம் எழுப்பி போராடி வருகின்றனர் என ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நெருக்கடியான காலநிலையில் மக்களுக்கு தீர்வை வழங்க அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை மலையகத்தில் உள்ள அமைச்சர்களுக்கு முதுகெலும்பு இருக்கின்றது என்பதை காண்பிக்கவே அமைச்சு பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.
மேலும் ஜனநாயக ரீதியில் வன்முறையில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் தாம் ஆதரவளிப்போம் என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.