பனை அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதார உதவித் திட்டம் 2021இன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கள் மற்றும் பதநீர் உற்பத்தியாளர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் இன்று ( வெள்ளிக்கிழமை) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 08சங்கங்களை உள்ளடக்கியதாக 137 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் கே.லிங்கேஸ்வரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் மாவட்ட இணைப்பாளர் இ.குணசீலன் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக இணைப்பாளர் க.புஸ்பமநோகரன், பனை அபிவிருத்தி சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் ஆர்.சசிக்குமார் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், குறித்த சங்கங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி யாழ்.கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 500துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.