பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போதைய சந்தர்ப்பத்தில், முக்கியமானதாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்குவது முக்கியம் என்றாலும்கூட, தற்போதைய சூழ்நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி வகிக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் வகிக்கின்ற அமைச்சுப் பொறுப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவார் என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அமைச்சர்களை நியமிக்கும்போது ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்றே நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் பிரதமராகவும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் இல்லை எனவும் குறிப்பிட்ட ரணில், ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது சகோதரர்களாக இருக்கிறார்கள் என்றும் எனவே அவர்கள் இருவரும் கலந்துரையாடியே அமைச்சர்களை தெரிவு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதைய நிலைமையில் 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது முக்கியமில்லை என்பதுடன், இதனை அரசியல் யாப்பின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய பிரச்சினை பொருளாதார சிக்கல்தான் என்றும் எனவே, அதனையே முதலில் தீர்க்கவேண்டும் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இருக்கின்ற வெளிநாட்டு ஒதுக்கங்களின் அடிப்படையில், அடுத்தவாரம் நாட்டை நடத்திக்கொண்டு செல்லக்கூட முடியாத நிலை ஏற்படலாம் என்றும் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.