ரம்புக்கனையில் பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
18 வயதுடைய சிறுவன் வயிற்று குழியில் காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், உயிருள்ள வெடிமருந்துகளால் காயங்களுடன் 15 பேர் கேகாலை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கேகாலை வைத்தியசாலையில் உள்ள அவர்களது கிளை அலுவலகம் அந்த நோயாளிகளின் மார்புப் துவாரம் மற்றும் வயிற்றுத் துவாரத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் காயமடைந்துள்ளதாக தமக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.
37 வயதுடைய ஒருவர் வயிற்றுப் பகுதியில் காயங்களுடன் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் 40 வயதுடைய ஒருவர் மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்களுடன் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் 18 வயதுடைய சிறுவன் அவரது வயிற்று குழியில் காயங்களுடன் ICU இல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்த மேலும் 15 நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தின் போது 13 நோயாளர்கள் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் பின்னர் அவர்களில் 6 பேர் கேகாலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மேலும் ஏழு பேர் மருத்துவ கண்காணிப்புக்குப் பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.