அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன.
‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி, போக்குவரத்து, தோட்டங்கள், துறைமுகங்கள், மின்சாரம், வங்கிகள், தபால் சேவைகள், சமுர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் உட்பட சகல துறைகளிலும் உள்ள மக்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியொன்றும் நாளை நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் உட்பட பல இடங்களில் இருந்து பேரணியாக சென்று காலி முகத்திடல் மக்கள் போராட்டக்களம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன (IPPBOA) தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இன்றைய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதற்கு அரச சேவை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (ACTWU) பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.