உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜேர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, அவர்களுடைய மூதாதையர்களை போல் போராடுகிறார்கள். 1945இல் இருந்ததைப் போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் போராடுகிறார்கள். புதிய தலைமுறையினர் போரில் ஈடுபட்ட தங்களுடைய தந்தையர்கள் மற்றும் தாத்தாக்களை நினைத்து பெருமை கொள்வார்கள்.
துரதிர்ஷ்டவசமாக இன்று, நாசிசம் மீண்டும் தலை தூக்குகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்திய நாசிசத்தின் மறுபிறப்பைத் தடுப்பது நமது பொதுவான கடமையாக இன்று உள்ளது.
உக்ரைன் பாசிசத்தின் பிடியில் இருப்பதால், இது ரஷ்யாவிற்கும், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ரஷ்யர்கள் பழிவாங்க வேண்டும்.அவர்களைத் தடுத்து நிறுத்துவது நமது புனிதக் கடமை, இது ஒரு மகத்தான தேசபக்தி போர், உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற நான் விரும்புகிறேன்’