கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ சுமந்திரன், ‘ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டம் அதே மாதம் 5 ஆம் திகதி நீக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட யோசனையைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கும் வகையிலேயே அவர் 5 ஆம் திகதி அதனை நீக்கியிருந்தார்.
அதேபோன்று தற்போது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பின்படி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படவேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறப்படாத பட்சத்தில், 10 நாட்களில் அந்த அவசரகாலச்சட்டம் தானாகவே இரத்தாகிவிடும்.
எதிர்வரும் 17ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடவுள்ளதால், 16 ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு அவசரகாலச்சட்டத்தின் மூலமான அதிகாரத்தைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி திட்டமிடுகின்றார்.
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பொதுப்பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களிலும் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கின்றார்.
அவ்வாறிருக்கையில் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்ததன் பின்னர், அதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதென்பது குற்றம் என்பதுடன் அரசியலமைப்பின் 42 ஆவது சரத்தை மீறும் செயலாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாம் இவ்வாரமே நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் யோசனையொன்றை முன்வைத்திருந்தோம்.
அதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் சேர்த்துக்கொள்வதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
எனவே அப்பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி நாளை நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.