நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக அலரி மாளிகை அருகே நேற்று இரவு மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கான சனத் நிஷாந்தவின் வீடு, குருநாகல் மேயரின் இல்லம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வீடு மற்றும் அலுவலகம், பந்துல குணவர்தன , காமினி லொக்குகே , டி.பி . சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத் , ரமேஷ் பத்திரண , திஸ்ஸ குட்டியாராச்சி , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலனவின் இல்லத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.