இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் கோரியுள்ளார்.
நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை தீர்க்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கவலை அடைவதாகவும் அவர் கூறினார்.
ஆகவே இடம்பெற்ற அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுதந்திரமாகன, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என மிச்செல் பச்செலெட் வலியுறுத்தினார்.
மேலும் வன்முறைகளைத் தடுக்கவும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பொலிஸாருக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் உட்பட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவசரகால பிரகடனத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.