முல்லைத்தீவு – செம்மலை கடலில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த மூன்றாவது இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அளம்பில் பகுதியைச் சேர்ந்த 22, 26 மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.
இதையடுத்து, பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் கீழுள்ள மீனவ அமைப்பினர் இணைந்து அவர்களைத் தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி 22 மற்றும் 26 வயதுடைய இரண்டு சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
பின்னர், மூன்றாவது இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அவரது சடலம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட இரண்டு இளைய சகோதரர்களின் சடலங்களுடன், மூத்த சகோதரனின் படத்தை தாங்கியவாறு இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், 29 வயதான குறித்த இளைஞனின் சடலம் கற்பாறையில் சிக்குண்டு இருந்த நிலையில், இன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.