முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் நிகழ்வுகளில் முல்லைத்தீவு பொலிஸார் தலையிடாது இருப்பதற்கான பணிப்புகளை வழங்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஏற்கனவே பொலிஸார், தடை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது கவலைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவுகூரப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கர்மவினையின் தாக்கங்களே இந்த நாட்டை தாக்குகின்றது என்பது தெளிவாவதாகவும் இந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்வதால் அவை அமைதி பெறும் என்பது எமது சமய நம்பிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், முல்லைத்தீவு பொலிஸார் இதனை தடை செய்வதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் இது சமய மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, 18 ஆம் திகதி புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.