மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாக எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென வும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பாடசாலைகளில் நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றினை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலைகளில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பாடசாலைகள் சோதனையிடப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டதுடன் உடனடியாக துப்புரவு செய்யும் பணிப்புரைகளும் விடுக்கப்பட்டன.
மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு ஒழிப்பு பிரிவு கள பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த டாக்டர் கு.சுகுணன், இந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் மிகவும் குறைந்தளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் மாதமாகும்.
ஆனால் என்றுமில்லாத வகையில் இந்த மாதம் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. மட்டக்களப்பு மாட்டத்தில் ஜனவரி தொடக்கம் இன்று வரையில் 700டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஒரு மாதகாலத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு நகரப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் 35வயது மற்றும் 47வயதுடைய இரண்டு பேர் கறுவப்பங்கேணி பகுதியில் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவொரு பாரதூர நிலைமையாகவே பார்க்கவேண்டியுள்ளது.இவ்வாறான நிலையில் இவற்றினை கட்டுப்படுத்தவேண்டிய முக்கிய காலத்திலிருக்கின்றோம்.
இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களை கள விஜயம் ஒன்றினூடாக பார்வையிட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களாக இதன்போது இனங்கண்ட பாடசாலை நிருவாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் எந்தவொரு உயர்வு, தாழ்வும் பாராது உச்சக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.