நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உரிய தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி சகல மாவட்ட செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் ஏற்பட்ட சொத்து சேதங்கள் தொடர்பாக அவர்கள் மதிப்பிடவுள்ளனர்.
மேலும் மே 09ஆம் தேதி வன்முறையால் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தோர் எண்ணிக்கை குறித்தும் தகவல் சேகரிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான தகவல்களைப் பெறுவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் உரிய பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பிரதேச மதிப்பீட்டு உத்தியோகத்தர்களின் உதவியை நாடுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.