எரிபொருள் விலைகள் இன்று (24) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாய் என கூறப்படுகின்றது.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் சுமார் 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் CPC இனால் இனியும் அத்தகைய இழப்பைத் தாங்க முடியாது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறைந்த வருமானம் பெறும் மக்களின் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு மண்ணெண்ணெய் விலையை தற்போதைக்கு அதிகரிப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை வட்டார தகவல்கள் தெரிவித்தன.