மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்ணெண்ணை இல்லாமை மற்றும் எரிவாயு இல்லாத காரணத்தினால் மக்கள் தினமும் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் எரிவாயு அடுப்புகள் மற்றும் மண்ணெண்ணை அடுப்புகளே பாவிக்கப்பட்டுவரும் நிலையில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாத நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளின் நிலைமைகள் உள்ளதன் காரணத்தினால் எரிவாயு மற்றும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தினமும் வீதிக்கு படையெடுக்கும் நிலையே காணப்படுகின்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் கொழுத்தும் வெளியிலிலும் பெண்கள்,வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றதை காணமுடிந்தது.
ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் நின்று இன்று மண்ணெண்ணையினை மக்கள் பெறும் நிலைமையேற்பட்டதுடன் குறிப்பிட்ட நேரத்துடன் மண்ணெண்ணை வழங்கப்பட்டு முடிந்த நிலையில்பெருமளவானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையினையும் காணமுடிந்தது.
தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்து மண்ணெண்ணைக்காக நின்றுநின்று கிடைக்காத நிலையிலேயே ஏமாற்றத்துடன் செல்லும் நிலைமைகள் தினமும் நடைபெறுகின்றது.
சில வீடுகளில் நீண்டகாலமாக கடைகளிலேயே உணவுகளைப்பெற்றுவருவதாகவும் கடைகளில் அதிகளவான விலைகள் சாப்பாடுக்கு பெறப்படுவதன் காரணமாக அதன் சுமையினை தாங்கமுடியாத நிலைக்கு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.