இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெற்றுவரும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையும் இந்திய கடலோர காவல்படையும் இணைந்து குறித்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
இதற்கமைய தலைமன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான பகுதியில் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வர்த்தகம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் பாதுகாப்பை பலப்படுத்த இரு நாட்டு பாதுகாப்புப் படையினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்பவர்களை இதன்போது தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான மீன்பிடி பிரச்சனைகளை குறைத்துக் கொள்வதற்கு இது உதவும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.