அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று(26) முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
அத்துடன் அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தினை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வரவு செலவுத் திட்ட உரையின்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.