பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பிரான்ஸினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் கையிருப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் 90 நாட்களுக்கு சமாளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 3 இலட்சம் யூரோக்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை பிரான்ஸ் அரசாங்கம் முன்னதாக வழங்கியிருந்தது.
அத்துடன், 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருந்துப் பொருட்களை ஏற்றிய இந்தியக் கப்பல் நாளைய தினம் இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.