பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தாா்.
இலங்கை தற்போது கடினமான காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்றும் நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.
குறிப்பாக நிதியுதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருற்களை மத்திய அரசு அளித்து வருகிறதென அவர் சுட்டிக்காட்டினார்.
பல இந்திய தன்னாா்வ அமைப்புகளும் தனிநபா்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழா்களுக்கு உதவிகளை அளித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு பொருளாதார ஆதரவுகளை அளிப்பது தொடா்பாக சா்வதேச மன்றங்களில் உரக்கப் பேசி வருகிறோம் என்றும் ஜனநாயக உறுதித்தன்மை மேலோங்கவும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு முதல்முறையாகச் சென்ற இந்திய பிரதமா் தான்தான் என்றும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.