“செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு” என்று தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.மல்வத்தை அஸ்கிரிய பீடாதிபதிபதிகளைச் சந்தித்தபின் அவர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.”கோத்தபாயவின் தவறான விவசாயக் கொள்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ரசாயன உரமும் இல்லை, சேதன உரமும் இல்லை.உரத்தட்டுப்பாட்டுடன் இப்பொழுது எரிபொருள் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.எரிபொருள்,உரம் இரண்டும் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாதுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”ஒரு வருடத்திற்கு மாத்திரம் 33 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடியால் அதுவும் இல்லை. தவறான உரக் கொள்கையால் பெரும்போக விவசாயத்தில் விளைச்சல் 60 சதவிகிதத்தால் குறைந்துவிட்டது.எதிர்வரும் காலத்தில் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. நடுத்தரவர்க்க மக்களால் கொள்வனவு செய்யமுடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது.ஓகஸ்ட் செப்டம்பர் மாதப் பகுதிகளில் உணவு நெருக்கடி வரலாம்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பயிற்செய்கையில் ஈடுபடத் தவறினால்,நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முடியாது” என முன்னாள் விவசாயத்துறை பணிப்பாளர் கே.பி குணவர்தன தெரிவித்துள்ளார்.”கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.எனினும்,கடந்த பெரும்போகத்தின்போது, இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதால், நெல் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளில் கிடைக்கும் அறுவடை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்டவாறு விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓர் உணவு நெருக்கடி தொடர்பாக எச்சரித்திருந்தார்.அவரும் அடுத்த ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இரவில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரித்திருந்தார்.
நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சூம் சந்திப்பின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைத்தீவு இதுவரை சந்தித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளின் போது நாட்டை பாதுகாத்தது விவசாயம்தான் என்று அவர் அதில் கூறினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் உரக் கொள்கையில் கை வைத்தார். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.அவருக்கு முன் ஆட்சி செய்த எல்லாத் தலைவர்களுமே விவசாய வாக்காளர்களை கவர்வதற்காக ரசாயன உரத்துக்கு மானியம் வழங்கினார்கள். அவருடைய தமையனார் மஹிந்தவும் அவ்வாறு மானியம் வழங்கினார். இதனால் விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு உரப்பை ஒன்றை 350 ரூபாயிலிருந்து 450 வரை ரூபாய் வரையிலும் மானிய விலையில் வழங்கியது. ஆனால் கோத்தாபய ஜனாதிபதியாக வந்ததும் நாட்டை ராணுவத்தனமாக இயற்கை உரத்துக்கு மாற்றவிழைந்தார்.
அது பெருந்தொற்று நோய்க் காலம். ஏற்கனவே இனப்பிரச்சினை காரணமாக நொந்து போயிருந்த பொருளாதாரம்,ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், ஏற்கனவே கோத்தபாயவின் வரிக் குறைப்பினால் நொந்து போயிருந்த பொருளாதாரம், அரசாங்கத்தின் புதிய உரக் கொள்கையால் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியதுபோல இதற்குமுன் வந்த எல்லாப் பொருளாதார அதிரச்சிகளில் இருந்தும் நாட்டை பாதுகாத்த விவசாயம், இந்த முறை நாட்டைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.கடந்த போகங்களில் செயற்கை உரப் பாவனை குறைந்தபடியால் விளைச்சல் 20 வீதம் அளவே கிடைத்தது என்று விவசாயிகள் பொதுவாகக் கூறுகிறார்கள்.ஒரு பகுதி விவசாயிகள் 12 விகிதம்தான் கிடைத்தது என்று முறைப்பாடு செய்கிறார்கள்.
இயற்கை உரம் ஓர் உன்னதமான கொள்கை. பூமியைப் பாதுகாக்க விரும்பும் எவரும் அதை ஏற்றுக் கொள்வர். ஆனால் தன் நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினரை ஈவிரக்கமின்றி புழு பூச்சிகளைப் போல கொன்றொழித்து யுத்தத்தை வெற்றிகொண்ட ஒருவர், நாட்டின் மண்ணை நேசிக்கிறேன் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக ரசாயன உரத்தை நிறுத்துகிறேன் என்று கூறியது ஓர் அக முரணே.
பொருளாதார நெருக்கடியானது மக்களால் தாங்க முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்தபொழுது, முன்னைய காலங்களைப் போல அந்த அதிர்ச்சியை தாங்கக் கூடிய நிலையில் விவசாயம் இருக்கவில்லை. இவை அனைத்தினதும் திரட்டப்பட்ட விளைவே மக்களை வீதிக்குக் கொண்டுவந்தது.
விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக அரசாங்கம் ரசாயன உரத்தை அனுமதித்தது. ஆனால் மானியத்தை நிறுத்தியது.மேலும் ரசாயன உர விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்தது. ஆனால் டொலர் பிரச்சினையால் திட்டமிட்டபடி ரசாயன உரத்தை கொண்டு வரமுடியவில்லை.இப்பொழுது இந்தியாவில் இருந்து பெறக்கூடிய உரத்துக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அந்த உரத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனின் அளவு போதாது என்ற ஒரு சந்தேகமும் உண்டு. எதுவாயினும் அந்த உரம் இம்முறை கால போகத்துக்குள் வந்துசேராது என்று விவசாயிகள் அச்சமடைகிறார்கள். இம்முறை கால போகத்திற்கு ஒப்பீட்டளவில் பிந்தி விதைத்த விவசாயிகள் கிட்டதட்ட 30 நாட்களுக்குள் உரம் கிடைத்தால் விளைச்சலில் மாற்றத்தை காட்டலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன.
அதேசமயம் கள்ளச்சந்தையில் உரம் ஒரு பை 45000 ரூபாய் போகிறது.அந்த விலைக்கு உரத்தை வாங்கி கமம் செய்த ஒரு விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? இப்பொழுது நெல் ஒரு கிலோவின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக போகிறது. ரசாயன உரம் நிறுத்தப்பட முன்பு அரசாங்கம் மானிய விலையில் 350 இலிருந்து 450 ரூபாய் வரையிலும் ஒரு உரப்பையை வழங்கியது. அப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை ஆயிரம் வரை போனது. ஆனால் இப்பொழுது நெல்லின் விலை ஒரு மூட்டை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் உரத்தை வாங்கி பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயி எந்த விலைக்கு நெல்லை விற்பார்? அந்த விலைக்கு நெல்லை வாங்க நடுத்தர வர்க்கத்தாலும் முடியாது போகலாம் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம். அப்படியென்றால் ஏழைகளின் பாடு எப்படியிருக்கும்? குறிப்பாக தமிழ் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்?
தமிழ்மக்கள் இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். இப்பொழுதும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மணித்தியாலக் கணக்காக வரிசையில் நின்று மோட்டார் சைக்கிளின் வயிறு முட்ட பெட்ரோலை நிரப்பி கொண்டு வந்து வீட்டில் அதை குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து போத்தல்களில் சேமிக்கும் பலரைரைக் காணலாம்.தமிழ்மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்த காரணிகளில் முக்கியமானது சீதனம். தவிர இயல்பாகவே முன்னெச்சரிக்கை உணர்வு மிக்க மக்கள். குறிப்பாக யுத்த காலத்தில் அந்த முன்னெச்சரிக்கை உணர்வு சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவித்தது.இப்பொழுது பொருளாதார நெருக்கடியின் பொழுதும் தமிழ் மக்களை பாதுகாக்க போவது, அல்லது தமிழ்மக்கள் ஓரளவுக்காவது சமாளித்துக்கொண்டு தப்பிப் பிழைக்க காரணமாக அமையப் போவது அவர்களுடைய சேமிப்பு பழக்கம்தான். இது முதலாவது.
இரண்டாவதாக, தமிழ்ப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு காசில் தங்கியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பணம் இப்பொழுது டொலரின் பெறுமதி காரணமாக பல மடங்காகப் பெருகி வருகிறது. எனவே அதுவும் தமிழ் மக்களுக்கு ஒரு பலந்தான்.
எனினும்,அதற்காக தமிழ் மக்கள் சும்மாயிருக்கக்கூடாது.ஒரு நெருக்கடியை முன் அனுமானித்து முன்னெச்சரிக்கையோடு சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். தானியங்களைச் சேமிக்க வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் அக்கறை காட்ட வேண்டும். தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல உணவு நெருக்கடி ஒன்று வரலாம் வராமலும் போகலாம். ஆனால் அதை நோக்கி தமிழ் மக்களைத் தயார்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு கட்சிகளுக்கும் செயற்பாட்டு அமைப்புக்களுக்கும் அதிகாரிகளுக்கும் உண்டு.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழ்ப் பண்பாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் காணப்பட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது.தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏற்கனவே காணப்பட்ட சிறுதானியங்களுக்கு “இராச தானியம்” என்ற பெயரை வழங்கி ஒரு நிகழ்வு இன்று காலை அச்சுவேலி பத்தமேனி பகுதியில் இடம்பெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு இலவசமாக சிறுதானியங்கள் வழங்கப்படும்.அவர்கள் அறுவடை முடிந்ததும் தமக்கு வழங்கப்பட்ட விதை தானியத்துக்குப் பதிலாக அதன் இரண்டு மடங்கு தானியத்தை பசுமை இயக்கத்துக்கு வழங்க வேண்டும்.அது மீண்டும் மறுசூழற்சிக்கு வழங்கப்படும்.தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் முன்னுதாரணத்தை ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆர்வமுடைய தரப்புக்களும் பின்பற்றலாம். மேலும் புதிய வித்தியாசமான திட்டங்களையும் யோசிக்கலாம்.
தமிழ் மக்கள் உடனடியாக முன்னாயத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இப்பொழுது உயிர் பிழைத்திருக்கும் பெரும்பாலான தமிழர்கள் போரினால் உமிழ்ந்து விடப்பட்டவர்களே.போர்க்கால அனுபவம் எல்லா நெருக்கடிகளின் போதும் தமிழ் மக்களுக்கு உதவும். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் வருவது வரட்டும் என்று வாளாயிருக்கக்கூடாது.