அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் மாற்று கருத்துக்களை முன்வைத்துள்ளன.
19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக நடைமுறைப்படுத்துவதை முதற்கட்டமாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை இரண்டாம் கட்டமாகவும் செயற்படுத்த கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தற்போது 19ஆவது திருத்தத்தின் முக்கிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூல வரைபில் உள்வாங்கப்படவில்லை என்பதனால் அதில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து விரைவாக 21 ஐ அமுல்படுத்த அவதானம் செலுத்த தீர்மானிக்கப்பட்டது.
21 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று எதிர்வரும் வாரத்திற்குள் அரசியமைப்பு வரைபினை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத விடயங்களை மாத்திரம் செயற்படுத்தி 21 ஆவது திருத்தச்சட்டத்தை விரைவாக நிறைவேற்ற நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்கள் இந்த கலந்துரையாடலின்போது எடுத்துரைத்தனர்.