கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட செயல் என்றும் இதற்கு பொலிஸும் அரசாங்கமும் ஆதரவளித்தது என்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சட்டத்தரணி நுவான் போபகே மற்றும் சட்டத்தரணி டி.எம்.திஸாநாயக்க ஆகியோருடன் சங்கத்தின் உறுப்பினர்களான தரிந்து ஜயவர்தன, ஷாலிகா விமலசேன, எம்.எப்.எம்.பசீர் ஆகியோர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.
இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதலில் சாட்சியமளித்த தரிந்து ஜயவர்தன, அரசாங்கம் வேண்டுமென்றே பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடலில் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தமது சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸார் விசாரணை செய்யவில்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில் கலவரம் அடக்கப்பட்டது.போராட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்தும் பொறுப்பும் திறமையும் தேசபந்து தென்னகோனுக்கு இருந்ததாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்குத் தெரியும் எனவும் அது தொடர்பாக தமது சங்கம் உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பிரதமர், அமைச்சர்கள், பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர் நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதல் தொடர்பாகவும் பொலிஸாரைத் தாக்க அனுமதித்தமை தொடர்பிலான காணொளி ஆதாரங்களையும் சங்கம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.