சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது உறுதியாகியுள்ளது.
இளவரசர் முகமது பின் சல்மான், இந்த மாதம் துருக்கிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளவரசரின் பயண திகதியை தீர்மானிக்க சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனைகளை தான் நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, சௌதி அரேபியாவுடனான இறுக்கமான உறவுகளை இயல்பாக்குவதற்கு துருக்கி செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த பயணத்தின் போது, இருதரப்பு வர்த்தகம், பிராந்திய வளர்ச்சி, அன்னிய செலாவணி, எரியாற்றல் திட்டங்கள் மற்றும் பிற முதலீட்டு விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலைக்குப்பிறகு, முகமது பின் சல்மான் இந்தப் பிராந்தியத்திற்கு வெளியே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 2019ஆம் ஆண்டு, ஜி-20 உச்சிமாநாட்டிற்காக அவர் ஜப்பான் சென்றிருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில், சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை சௌதி முகவர்கள் கொன்றதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்தன. துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்தோகன் ஏப்ரல் பிற்பகுதியில் சௌதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, இந்த உறவுகளில் இயல்பு நிலை சிறிதே திரும்பத் தொடங்கியது.