ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மேற்கத்திய பீரங்கி அமைப்புகள் தேவை என அவர் மேலும் கூறினார்.
ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்யப் படைகள் அணுசக்தி அல்லாத அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. கனரக பீரங்கி, பல ரொக்கெட் ஏவுதள அமைப்புகள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை இதில் அடங்கும்.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிகமான ஆயுதங்கள் தேவை. ரஷ்ய மற்றும் உக்ரைனியப் படைகளுக்கு இடையே உள்ள முழுமையான சமத்துவமின்மை உக்ரைனின் அதிக உயிரிழப்பு வீதத்திற்குக் காரணம்.
பெப்ரவரி 24ஆம் திகதி ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யா பெற்ற நிலப்பரப்பை மீள ஒப்படைத்தால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்’ என கூறினார்.
டொன்பாஸ் முழுவதையும் ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கையில், உக்ரைனிய துருப்புக்கள் இடைவிடாத குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.