நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சுகாதார, மின்சக்தி, எரிபொருள், பாதுகாப்பு, கல்வி மற்றும் இதர அத்தியாவசிய சேவைகள் அன்றையதினம் இயங்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாதங்களுக்கு இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் விடுமுறையின் போது விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களைத் தவிர அனைத்து அரச நிறுவனங்களையும் அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.