முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் புதிய முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காசோலை வசதி உடனடியாக நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், காசோலை மூலம் ஒரே தடவையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கு பணத்தை செலுத்தும் முறைமை கைவிடப்பட்டதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைப்பது மேலும் வரையறைக்கு உள்ளாகும் என குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாத்திற்கோ ஒரு முறை எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.