இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் ரயில்களை இயக்க முடியாமல் போகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயந்திர எண்ணெய் இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்க டொலர்கள் இல்லை எனவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தற்போது இயக்கப்படும் ரயில்களில் ஒரு பகுதி சேவையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இயந்திரங்களுக்கு தேவையான எண்ணெய் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக ரயில் நிலையங்கள் பொதுமக்களினால் நிரம்பி வழிவதனையும் அவதானிக்க முடிகின்றது.