மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று எரிபொருள் வழங்குமாறு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய மதிய உணவு நேரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடியவர்கள், அங்கிருந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றிகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலகத்தில் ஐந்து சுகாதார துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு தினத்தை ஒரு நிலையத்தில் ஏற்பாடு செய்துதருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் தாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையினை முன்வைத்துவந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டுவந்ததாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சுகாதார சேவையில் ஈடுபட்டுவருவோர் வந்துசெல்வதற்கான எரிபொரும் மிக அத்தியாவசியமானது எனவும் அவ்வாறு எரிபொருள் வழங்காவிட்டால் வைத்தியசாலையில் நோயாளர்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல்நிலைகள் ஏற்படும் எனவும் இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சார்பில் கருத்து தெரிவித்த டாக்டர் மதனழகன் தெரிவித்தார்.