நிதியமைச்சு – ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்துக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் வீதியில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை அவர்கள் அவ்விடத்திலிருந்து நிதியமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றுக்கான இரண்டு நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுழைவாயில்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதால், குறித்த அலுவலங்களுக்கு வருகைதந்த அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்த மக்களுக்கு அலுவலகத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் சிரமப்பட்டிருந்தனர்.
நிதியமைச்சின் நுழைவாயில் மறிக்கப்பட்டதால் சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரும், 4 பெண்களும், 16 ஆண்களும் உள்ளடங்கலாக 21 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.