வேலைகள், ஊதியம் மற்றும் மேலதிக நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதால், பிரித்தானியாவில் ரயில் சேவைகள் இன்று புதன்கிழமையும் தடைபட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவகையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இடம்பெறும் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மில்லியன் கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ், டோர்செட் மற்றும் செஸ்டர், ஹல், லிங்கன் மற்றும் வொர்செஸ்டர் போன்ற இடங்கள் உட்பட, நாடுமுழுவதும் அனைத்து இடங்களிலும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கியதாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இன்று புதன்கிழமை வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படாவிட்டாலும், 60 விகிதமான ரயில்கள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தொழிற்சங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.