இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குதல் தொடர்பாக நேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய விசேட தூதுக்குழுவானது, கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டது.
இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்து, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது. அது தொடர்பாக மீளாய்வு செய்த தூதுக்குழு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கமும் அரசியல் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவுவதில் இந்திய அரசாங்கம் கணிசமான பங்கை வகிக்கிறது.
அதற்காக இலங்கை மக்களும் அரசாங்கமும் பாராட்டுகளையும் நன்றியையும் இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தூதுக் குழுவினரிடம் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாற்றவும் இந்திய உதவித் திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
இக்கட்டான காலகட்டத்திற்குப் பிறகு நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தூதுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான செயலாளர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், இந்திய கடல்சார் பிராந்திய ஒன்றிணைந்த செயலாளர் கார்த்திக் பாண்டே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.