பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்ததாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கை குறித்து இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.
எனினும், எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில் கலந்துரையாடல் நிறைவடைந்ததாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தை 30 வீதத்தினாலும், ஆக குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக உயர்த்தவும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறான இணக்கம் ஏற்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பேருந்து கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பான பரிந்துரைகளை நாளை போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 30 வீதமாக உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.