யக்கஹாபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை, குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் கடந்த திங்கட்கிழமை குறித்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கொமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.