கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை கையளிப்பது இன்னும் இரண்டு நாட்களுக்கு தாமதமாகும் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மற்றுமொரு கைதிகளிடம் வாக்குமூலம் பெற வேண்டியிருப்பதால் அறிக்கையை வழங்க உறுப்பினர்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தன்னிடம் கையளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கையினை கையளிக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் காரணமாக உடலில் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட சிக்கல்களே குறித்த மரணத்திற்கான பிரதான காரணம் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் 4 பேரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.