உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் முதல் கட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குன்மிங்கில் மெய்நிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உலகளாவிய பல்லுயிர் மேலாண்மை மற்றும் 2020க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு வலுவான அரசியல் உத்வேகத்தை அளிப்பதாக அக்கூட்டம் இருந்தது.
பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது இந்நிலையிலர் அக்கூட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்புகளைச் செய்வதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் சீனா திட்டமிட்டிருந்தது.
எனினும், ஐ.நா., உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் எலிசபெத் மருமா ம்ரேமாவின், அறிவிப்பின் பிரகாரம் இப்போது சீனாவிலிருந்து அந்தக் கூட்டத்தொடர் இடமாற்றப்பட்டுள்ளது.
‘ஐ.நா., உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டிற்கான கட்சிகளின் மாநாட்டின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம், நிச்சயமற்ற நிலைகள் காரணமாக கனடாவுக்கு மாற்றப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.
குறித்த கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த சீனா, தனது கருப்பொருளுடன் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் எனவும், சீனாவும் உயர்மட்டப் பிரிவைக் கூட்டி, பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளரும் மாநிலங்களின் அமைச்சர்கள் பங்கேற்பதற்கான நிதியளிக்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.